புங்கனூர் குட்டை மாட்டினை கோ தானம் செய்தார் - சீர்காழி மார்கோனி இமயவரம்பன்
சீர்காழி மே - 8
பாலுக்காக அழுத பிள்ளை அவதரித்த ஊர். முலைப்பால் ஊட்டி ஞானம் ஊட்டியதாக ஐதீகம். இடைக்கால சோழர்கள் , பிற்கால சோழர்கள் , பிற்கால பாண்டியர்கள் , விஜயநகரப் பேரரசு , மராட்டியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது , சீயாழி. இவ்வூருக்கு பிரம்மபுரம், வேணுபுரம், தோணிபுரம், கழுமலம், புகலி, சீர்காழீஸ்வரம், ஸ்ரீ காளி என பன்னிரண்டு பெயர்கள் இருந்தன.
சீர்காழியைப் பற்றிய ஆரம்பக் குறிப்பு சங்க காலத்திலிருந்து ( கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை) சோழ மன்னன் கோசெங்கண்ணனின் வரலாற்றில் காணப்படுகிறது , அவர் இங்கு இரத்தக்களரிப் போரில் வெற்றி பெற்றதாக நம்பப்படுகிறது. அதன் பொருட்டு மாடக்கோவிலாக அமைந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. கோட் செங்கண்ணன் காலத்தில் கட்டப்பட்ட மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று என்றும் நம்பப்படுகிறது. (இக்கோயிலில் சோழ மன்னர்களின் 47 கல்வெட்டுகள் நிலம், ஆடு, மாடு, எண்ணெய் போன்ற பல்வேறு கொடைகளை கோவிலுக்குப் பதிவு செய்துள்ளன.) இக்கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம், மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன.
“இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. வீரராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது.
இப்பகுதி 1532 இல் பாண்டியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது , பின்னர் தஞ்சாவூர் நாயக்கர் ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாக மாறியது . பிஜாப்பூர் நவாபின் மராட்டிய எதிரியும் சிவாஜியின் ஒன்றுவிட்ட சகோதரருமான முதலாம் எகோஜி (1675-84)- யால், 1674 இல் இப்பகுதி கைப்பற்றப்பட்டது . 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த நகரமும் பிராந்தியமும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு பகுதியாக மாறியது.
1799 - இல் தஞ்சாவூர் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி காலத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் உருவாக்கப்பட்டது. (1798-1832) அவர் அரியணையில் மீண்டும் அமர்த்தப்படுவதற்கு ஈடாக அவரது ராஜ்ஜியத்தின் பெரும்பகுதியை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அப்படி கொடுக்கப்பட்ட ஊர்களில் சீர்காழியும் ஒன்று.
தமிழிசை மூவர் அருணாச்சல கவிராயர் (1711-78), முத்து தாண்டவர் (1525-1600) மாரிமுத்துப் பிள்ளை (1712-87), சீர்காழியிலிருந்து தோன்றியவர்கள். சைவ நாயன்மார்களில் முதன்மையான திருஞானசம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் இங்கு பிறந்தார் என்று சொல்லப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டு என்று இல்லை சமீப கால வரலாற்றிலும் புரட்சிகர மத செயல்பாடுகளில் தங்களை முன் நிறுத்திக் கொண்ட பிராட்டஸ்டண்ட் மதத்தவரால் கல்வி போதிக்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரும் சீர்காழிதான்.
1896 ஆம் ஆண்டு லூத்தரன் மிஷனால் திறக்கப்பட்ட லீப்ஜிக் எவாஞ்சலிகல் லூத்தரன் மிஷன் பள்ளிதான் இந்த நகரத்தின் முதல் ஆங்கிலப் பள்ளி. லூத்தரன் மிஷன் என்பது தஞ்சையில் 1778 ஆம் ஆண்டு வரை ரெவ. சி.வி. ஸ்வார்ட்ஸால் நிறுவப்பட்ட ஆரம்பகால புராட்டஸ்டன்ட் மிஷன் ஆகும்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, சீர்காழி 1991 வரை தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகத் தொடர்ந்தது , அது மார்ச் 2020 வரை நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. நடுவில் காயிதே மில்லத் பெயரில் மாவட்டம் அமைந்திருந்தது, பின்னர் மாவட்டங்களின் பெயர்களில் இருந்து தனிநபர்களின் பெயர்கள் எடுக்கப்பட்ட போது அந்தப் பெயரும் எடுக்கப்பட்டு விட்டது. தற்போது சீர்காழி புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் மூன்று தாலுகாக்களில் ஒன்றாக இருக்கிறது .
அப்படி சீர்காழி பகுதியில் தோனி அப்பர், பிரம்மபுரீஸ்வரர், திருநிலை நாயகி அம்பாள் அருள் புரியும் சட்டை நாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 24 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டை நாதர் சுவாமி திருக்கோவிலின் சிறப்புகளை சொல்லிக் கொண்டேப் போகலாம். சீகாழிக்கு அருகில் இருந்த திருக்கோலக்கா என்னும் தலத்திற்கு தம்முடைய தோளில் குழந்தை சம்பந்தரை வைத்துக் கொண்டு சென்றார், சிவபாத இருதயர். அங்கே உள்ள இறைவனாரை வழிபட்டு ‘மடையில் வாளை பாய’ என்று திருப்பதிகம் ஒன்றை கையால் தாளமிட்டப்படி பாட ஆரம்பித்தார் சம்பந்தர்.
சம்பந்தரின் பிஞ்சுக்கைகள் தாளமிட்டதால் சிவக்கத் தொடங்கின. அதனைக் கண்ட இறைவனார் திருவருளால் ‘நமசிவாய’ என்னும் திருவைந்துதெழுத்து பொறித்த பொன்னாலாகிய தாளங்கள் குழந்தையின் கையில் தோன்றின. இறைவனின் கருணையை எண்ணியபடி அத்தாளங்களை தலையில் வைத்து வணங்கி, பின்னர் அதனைக் கொண்டு தாளமிட்டு பதிகத்தைப் பாடி முடித்தார். திருக்கோலக்கா இறைவன் தாளங்களை வழங்க, அங்கிருக்கும் அம்மை அவற்றிற்கு நல்ல ஓசையைக் கொடுத்தாள் என்று வரலாறு கூறுகிறது.
அன்றிலிருந்து ‘திருக்கோலக்கா’ திருக்கோவில் ‘தாளமுடையார் கோவில்’ என்றும், இறைவனார் ‘சப்த புரீசர்’ என்றும், அம்மை ‘ஓசை கொடுத்த நாயகி’ என்றும் வழங்கப்படுகின்றனர். ஞானசம்பந்தருக்கு கைதாளம் போட்டு கை சிவந்ததால் பொன்னால் தாளம் செய்து கொடுத்த ஊரிலிருந்து வந்தவன் என்றும் என்னை சொல்லிக்கொள்ளலாம்.
தேர், சப்பரம், தெப்பம் எல்லாம் இந்த ஊரிலும் உண்டு. கூடுதலாக முத்து பல்லக்கும் உண்டு. ஞானசம்பந்தரை சிறுவயதில் முத்து பல்லக்கில் பார்த்திருக்கிறேன். ஞானசம்பந்தரை உருவகமாக, செப்பு திருமேனியாக பார்த்திருக்கிறேன், பிறகு தான் அவருடைய தமிழை படிக்க , படிக்க இயற்கையின் மேல் ஆர்வம் வந்தது. அந்த இயற்கையை பாடும் பதிகம் இன்னமும் என் காதில் கேட்கிறது.
பொதுவாக கோவில்களில் பசுமடங்கள் அமைந்திருப்பது வழக்கம். விதை நெல்லை பாதுகாப்பது எப்படி விவசாயிக்கு முக்கியமோ அதேபோல கால்நடை இனங்களை பாதுகாப்பது சமூகத்திற்கு அவசியம் என்று கருதினார்கள், அக்கால மக்கள். கோவில்கள் பசுமடங்கள் வழி நாட்டு மாட்டு இனங்களை காப்பாற்றி அவரிடம் இனவிருத்திக்கு காளைகளை வளர்த்து வந்த காலம் இருந்தது. அப்படி தருமை ஆதீனத்தின் ஆட்சிக்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி திருக்கோவிலிலும் ஒரு பசு மடம் இருந்தது.
கிழக்கு கோபுர வாசலின் வெளி மதில் சுவருக்கு வடக்கு புறத்தில் அமைந்திருந்த பசுமடத்தில் ஏராளமான பசுமாடுகள் வளர்க்கப்பட்டன காளைகளும் இருந்தன. தஞ்சாவூர் ஜில்லா புகழ்பெற்ற நாட்டு மாட்டு இனமான உம்பளச்சேரி மாடுகளும் அதில் அடக்கம். பல ஆண்டுகளுக்குப் பிறகு பசு மடத்தை புதுப்பிக்க சன்னிதானம் சிந்தித்ததின் பெயரில் இன்றைக்கு சித்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன், மாடு வாங்க.
நாட்டு மாடு வகைகளில் இறைவனுக்கு உகந்ததாக திருப்பதி தேவஸ்தானம் தேர்ந்தெடுத்து வளர்த்து வரும் புங்கனூர் குட்டை என்ற நாட்டு மாட்டு வகையில் கலப்பினம் இல்லாத சுத்தமான மாட்டை தேடி வாங்குவதற்கு இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என்று நம்பிக்கை வைத்திருக்கிறேன்.
காங்கேயம், உம்பளச்சேரி, மணப்பாறை ,பர்கூர் என்று நாட்டு மாடு இனங்கள் நம்மிடையே இருந்தாலும் 32 இனங்களில் மூன்று நான்கு வகைகள்தான் குட்டை மாட்டு வகைகள். அவற்றில் வெச்சூர், மலநாடு கிட்டா, காசர்கோட் குள்ளன் கிட்டா மாடுகள் போல இந்த புங்கனூர் இன மாடுகளும் குள்ளமானவை. மூணு, நாலடி உயரம் தான் இருக்கும்.
சித்தூர் மாவட்டம், பலமனேர் கால்நடை பண்ணையிலும், புங்கனூர் காளைகள், பசு மாடுகள் இருக்கின்றன. அதற்கான செயற்கை கருவூட்டல் ஊசியும் அங்கே கிடைக்கின்றது. இந்த வகை மாடுகள் பலமனேர், மதனப்பள்ளி, வயல்பாட், பைலர் மற்றும் சந்திரகிரி ஆகிய தாலுகாக்களில் காணப்படுகிறது. புங்கனூர் ஜமீன்தார் வளர்த்து பிரபலப்படுத்திய நாட்டு மாடு வகை, புங்கனூர் குட்டை.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) கால்நடைத் தோட்டத்தில் சுமார் 200 புங்கனூர் பசுக்கள் உள்ளன. இந்த பசுக்களின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் வெங்கடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்யப் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதியில் வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு க்ஷீர அபிஷேகத்திற்கு புங்கனூர் பசுவின் பால் பயன்படுத்தப்படுகிறது. திருப்பதி கோவில் லட்டு தயாரிக்க புங்கனூர் பசுவின் நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த பசுவின் தரிசனமே மிகவும் புனிதமானது என்று நம்பப்படுகிறது.
கால்நடைகள் இயற்கை சுழற்சியின் ஒரு அங்கம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. புராணக் கதைகளும் இதிகாசங்களும் வரலாறும் நமக்கு அத்தகைய செய்தியை உறுதிப்படுத்துகின்றன. பசு மடங்களை காப்போம் நாட்டு இன மாடுகளின் இருப்பை உறுதி செய்வோம்.
பாலுக்காக அழுத பிள்ளை ஆளுடைய பிள்ளை அவதரித்த ஊர். இன்றும் பல பிள்ளைகள் பாலுக்காக அழுதபடி இருக்கிறார்கள். பசிப்பிணி போக்க என்னளவில் , அன்றாடம் செய்யும் காரியங்களில், சிறிதேனும் முயற்சிக்கிறேன். செல்வ வளம் பெருகும் புங்கனூர் குட்டை மாட்டினை கோ தானம் செய்ய அனுமதி அளித்த தருமபுர ஆதீன மகா சன்னிதானத்திற்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.
பசு மடம் வளர்ந்தால் பால் பெருகும் பால் பெருகினால் விவசாயம் பெருகும் விவசாயம் பெருகினால் ஊர் வளம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஜீவகாருண்யம் பேசிய வள்ளலார், இயற்கையை நேசித்துப் பாடிய ஞானசம்பந்தர் ஆகியோரால் ஆராதிக்கப்பட்ட ஊரில் நானும் சிறு துரும்பை எடுத்து வைக்கிறேன், முதல் படியாக.
வளரட்டும் தொண்டுள்ளம், இயற்கை மக்களை காக்கட்டும் .
மார்க்கோனி இமயவரம்பன்.
நன்றி.
(தரவுகளும் கட்டமைப்பும் சீனிவாசன் நடராஜன்.)