இன்று பத்திரிகைபோராளிதோழர் கௌரிலங்கேஷ் நினைவு நாள்

நினைவஞ்சலி

08-09-2022 கௌரியின் நினைவுநாள்.
ஒரு கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டால், ஆயிரம் பேர் முளைத்து வருவோம்.

யார் இந்த கௌரி லங்கேஷ்? 55 வயது அறிவு பெட்டகம்.

 பெங்களூரில் ஒரு பத்திரிகையை சொந்தமாகவே நடத்தி வந்தவர்.. மிக சிறந்த இலக்கியவாதி..

தன்னுடைய அப்பா லங்கேஷ் போலவே, முற்போக்கு சிந்தனை கொண்டவர்..!

இளம்பெண் கௌரி நினைத்திருந்தால், வசதியான, வளமான வாழ்வு வாழ்ந்திருக்கலாம்.

ஆனால், அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதையை தேர்ந்தெடுத்தார்.

அதற்கு பக்கபலமாக பத்திரிகையை துணைக்கு வைத்து கொண்டார். இதனால் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தார்.

"பத்திரிகா" என்பதுதான் கௌரி நடத்தி வந்த நிறுவனத்தின் பெயர்.. கடைசிவரை எவ்வித ஒரு விளம்பரமும் இல்லாமல், 

முழுக்க முழுக்க தன்னுடைய வாசகர்களின் கட்டணத்தை மட்டுமே வைத்து, அந்த பத்திரிகையை கடினமான சூழலிலும் வைராக்கியத்துடன் நடத்தி காட்டினார்.

அநீதிகளை தோலுரிக்கும்"எழுத்துக்களை எழுதி எழுதி தீர்த்தார்.

கர்நாடகத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை அமலாக்க ஆதரவு தந்தவர் கௌரி.

 கர்நாடகத்தை மாற்ற நடந்த முயற்சிக்கு, தன்னுடைய எதிர்ப்பை வலிமையாக பதிவு செய்தார்.

கௌரி அடிக்கடி சொல்வார், "டாக்டர் அம்பேத்கரால் இயற்றப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை கொண்டுள்ள இந்தியாவில் பிறந்த நான், அம்பேத்கரை போலவே மத பாகுபாடுக்கு எதிராக என் வாழ்நாள் முழுக்க போராடிக்கொண்டே இருப்பேன்" என்பார்.

ஆனால், 2017-ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி இரவு 8 மணிக்கு வேலை முடிந்து திரும்பி வந்தபோது, வீட்டு வாசலிலேயே பைக்கில் வந்த 3 மர்மநபர்கள் துப்பாக்கியால் 7 முறை இவரை சுட்டுவிட்டனர்.. சுருண்டு விழுந்து அங்கேயே காலமானார்.

இவரது மிகநெருங்கிய நண்பரான நடிகர் பிரகாஷ் ராஜ், எந்த மேடையில் பேசினாலும் சரி, கௌரியை நினைவு கூராமல் தன் பேச்சை முடிப்பது கிடையாது.

உண்மை ஒருநாள் வெளிவரும், நீதி வென்றே தீரும், மக்கள் விழிப்படைய வேண்டிய காலகட்டம் இது, இன்னொரு கெளரி கொலையாகாமல் நாம்தான் போராட வேண்டும் என்ற பிரகாஷ்ராஜ் சொன்ன வரிகளை இன்றைய தினம் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது.

கௌரியின் சிறப்பியல்புகள் எத்தனையோ உள்ளன.ஒரே ஒரு உதாரணம் மட்டும் இங்கு சொல்கிறேன்..!

ஒருமுறை, அங்குள்ள பழங்குடி மக்களுக்காக ஒரு பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலை இவருக்கு ஏற்பட்டது.

 அதற்காக அந்த பழங்குடி மக்களை தன்னுடைய அறையிலேயே தங்க வைத்து கொண்டார்... 

அந்த மக்களோ கழிவறையை பயன்படுத்த தெரியாதவர்கள்.. காலை வேளைகளில், அவர் அந்த கழிவறைக்கு வரும்பொழுதெல்லாம் மிக மோசமாக அசுத்தப்படுத்தி வைத்திருந்தார்கள்.

அதைப் பார்த்து முகம் சுளிக்காமல், கௌரியே அந்த கழிவறையை சுத்தம் செய்துள்ளார்.

இதை அவருடைய சக பத்திரிக்கையாளர்களும் நண்பர்களும் கண்கூடாக பார்த்து வியந்தனர்.

கௌரியின் எழுத்துக்கள், அத்தனையும் வசந்தத்தின் இடிமுழக்கங்கள் என்றே சொல்லலாம்.

 அவைகள் ஒவ்வொன்றும் பழமைவாதிகளின் காதுகளில் கணீரென ஒலித்தது.

 கண்களில் பளீரென ஒளிர்ந்தது,  அதேசமயம், காயமடைந்து புண்ணாகி சீழ்ப்பிடித்த ரணங்களில் நெளியும் புழுக்கள் போல சிலரை நெளியவும் வைத்தது.

அதனால்தான், கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாதவர்கள், கடைசியில் எடுக்கும் ஆயுதம் எப்போதும் வன்முறையாகவே அமைந்து விடுகிறது.

இந்த தேசத்தில், நோகாமலும், தெருவில் கால்படாமலும்,  போராளிகள் என்று பிதற்றி கொள்வோர் மத்தியில், கௌரி லங்கேஷ் மக்களுக்கான நிஜ போராளியாக இன்றும் ஜொலிக்கிறார்.

 கடைசிவரை மக்கள் நலனுக்காகவே வாழ்ந்து மடிந்த போராளி கௌரி.

 பிற்போக்குத்தனத்தை எதிர்த்து வீரசமர் புரிந்து, தன்னுயிரை நீத்தவர் கௌரி.

வாக்குப்பதிவு எந்திர மோசடியை அம்பலப்படுத்தியதில் சிறப்பான பங்களிப்பை செய்தவர் கௌரி.

தலித் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காக கடைசிவரை குரல் கொடுத்தவர் கௌரி.

நக்ஸலைட்டுகள் மனம் திருந்தி, மீண்டும் எளிய வாழ்க்கையை வாழ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர் கௌரி.

பெண்களுக்காக  ஒடுக்கப்பட்டவர்களுக்காக  தலித்களுக்காக சமூக சீர்கேடுகளுக்கு எதிராக  போராடியவர்.

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய துணிச்சல் மிகுந்தவர் கௌரி.

தன்னை கேலி செய்தாலும், பொறுமையாக வாதாடும் பக்குவமுடையவர் கௌரி.

அதேசமயம் எந்த சூழலிலும், தன் அபரிமிதமான அன்பை யார் மீதும் கடைசிவரை குறைத்து கொள்ளாதவர் கௌரி.

நினைவு தினங்கள் என்பதே ஒருவகையில் மரணத்துக்கான நியாயங்களை எப்படியாவது 
பெற்றுவிடுவதற்கான முயற்சிதானே.?

வீரவணக்கத்துடன்

ஏ.கே.பாஸ்கர்
ஆசிரியர்
நமது தின ஜெயம் நாளிதழ்

R. ரவிக்குமார்
தலைவர்
அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை