புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அறிவியல் இயக்கத்தின் சார்பில் மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை ஒன்றிய மாநில, அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் .
புதுக்கோட்டை மாவட்டம் ஆக.20:
கந்தர்வகோட்டை ஒன்றிய அறிவியல் இயக்கத்தின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினத்தை முன்னிட்டு மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் வட்டார தலைவர் அ.ரகமதுல்லா தலைமையில் நடத்தப்பட்டது. வட்டாரச் செயலாளர் எம்.சின்னராசா அனைவரையும் வரவேற்றார்.
இதில் கையெழுத்து இயக்கத்தை அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார் தொடங்கி வைத்து
தேசிய அறிவியல் மனப்பான்மை தினதையொட்டி அறிவியல் இயக்கம் மாநிலம் முழுதும் செய்யும் பணிகள் குறித்து பேசினார்.
அப்போது ஆகஸ்ட் 20 முதல் 27 வரை ஒருவார காலத்திற்கு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநிலம் முழுதும் துண்டு பிரசுரம் மூலம் பிரச்சாரம், அறிவியல் அற்புதங்களை விளக்கும் மந்திரமா ?தந்திரமா? நிகழ்வு, அறிவியல் விழிப்புணர்வு பேரணி, குறும்படம் திரையிடுதல், வினாடி வினா போட்டி, உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகிறது. இதில்
பொதுமக்கள், சுயஉதவி குழுக்கள், மகளிர், இளைஞர்கள், ஆசிரியர்கள், துளிர் இல்லம், சிட்டுகள் மையம், பள்ளி, கல்லூரிகள் என அனைத்து தரப்பு மக்களிடமும் தேசிய அறிவியல் மனப்பான்மை தின உறுதிமொழியை ஏற்கசெய்யவும், மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை விரைவில் ஒன்றிய, மாநில அரசுகள் நிறைவேற்றவும் வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
தேசிய அறிவியல் மனப்பான்மை தினம்:
ஆகஸ்ட் 20 என்பது
இந்தியா முழுவதும் செயல்படும் மக்கள் அறிவியல் இயக்கங்களின் சார்பில் தேசிய அறிவியல் மனப்பான்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2013 ல் இதே நாளில்
மகாஷ்டிராவில் காலையில்
நடைபயிற்சியில் இருந்தபோது
அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கியால் தலையிலும், நெஞ்சிலும் 4 குண்டுகள் துளைக்கப்பட்டு நிலையில் சமூக செயற்பாட்டாளர் நரேந்திர தபோல்கர்படுகொலை செய்யப்பட்டார்.
மூடநம்பிக்கைகளில் இருந்து அப்பாவி மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்று செயல்பட்டதற்காக
பிற்போக்காளர்கள், மதவெறியர்களால் அவர் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.
அவரைத்தொடர்ந்து கோவிந்த் பஞ்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ்கர் என தொடர்கொலைகள்
எதற்காக, அவர்கள் சமூகநீதியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கொலை செய்யப்பட்ட சமூக விஞ்ஞானி, மக்களின் சமூகநீதிக்காவலர் நரேந்திர தபோல்கரின் நினைவாகவே ஆகஸ்ட் 20, அன்று இந்தியா முழுமைக்கும் அகில இந்திய மக்கள் அறிவியல் அமைப்புகளால் நாடு முழுவதும் அனுசரிப்பது என முடிவு செய்தது.
இன்று இந்தியாவில் அறிவியலுக்கு எதிராக பல்வேறு சாதி, மத வெறிப்போக்குகளும், மூட நம்பிக்கைகளும் ஊட்டி வளர்க்கப்படுகிறது.
“எமது நம்பிக்கை , பாரம்பரியம், பழக்க வழக்கம் இதில் யாரும் தலையிடக்கூடாது, விமர்சிக்கக்கூடாது” என்கிற பெயரால் மனிதத்துக்கும் வளர்ச்சிக்கும் குந்தகம் செய்யும் போக்கு ஓங்கி வருகிறது .
இன்னொரு
போலி அறிவியல் மேல் மட்டத்தில் உள்ள பொறுப்பான மனிதர்களாலேயே ஊட்டி வளர்க்கப்படுகிறது .
ஏன்? எதற்கு? எப்படி? என்ன? எதனால்? எங்கு? எப்போது? எவரால்? என ஒவ்வொன்றையும் கேள்விகளால் துளைக்கும் அறிவியல் உண்மை தேடும் சமூக உளவியலைக் கட்டி எழுப்புவோம்.
நாம் அனைவரும் அறிவியல் வழி நடப்போம், அறிவியல்தான் மக்களை ஒன்றிணைக்கும் . நல்வழியில் கொண்டு செல்லும், அனைவரையும் சமமாக நடத்தும்
எதனையும் கேள்வி கேட்கச் சொல்லும் அறிவியல் மனப்பான்மையை உணர்ந்து, அதனை நேர்மையாக பின்பற்றுவோம் என தபோல்கர் கொலையுண்ட தினத்தில் உறுதி ஏற்போம் என்றார்.
இன்று தபோல்கர் கொலையுண்ட தினம் அல்ல, இது அறிவியல் மனப்பான்மையை, அறிவியல் விழிப்புணர்வை, அறிவியல் எண்ணங்களை, அறிவியலையே கொலை செய்த தினம் என்றே புரிந்துகொள்ள வேண்டும்.
நமது அரசியல் அமைப்பு
இந்திய குடிமக்கள் அனைவரும் எந்த மதத்தில் இருக்கவும், சம உரிமையுடன் நடத்தப்படவும் வேண்டும் என்கிறது.
அரசியல் அமைப்பின் விதி 51(A) H யில்
“மக்கள் அறிவியல் மனப்பான்மையுடன் மற்றும் மனிதநேயத்துடன் வாழவும், எதனை வேண்டுமானாலும் கேள்விக்குட்படுத்தலாம். இதனடிப்படையில் மூடநம்பிக்கை ஒளிப்புச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் பேசினார்.
பின்னர் பேருந்து நிலையத்தில் கூடியிருந்த பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.
மேலும் ஒன்றியம் முழுக்க 2000 பேரை சந்தித்து மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி கையொப்பம் பெற்று அறிவியல் இயக்க மாநில மையத்தின் வழியாக தமிழக முதல்வரிடம் வழங்கி சட்டம் இயற்ற வழியுறுத்துவோம் என்றார்.
அறிவியல் இயக்க தொடர் பணிகள் குறித்து மாவட்ட இணைச் செயலாளர் முனைவர் ரெ.பிச்சைமுத்து, எழுத்தாளர் அண்டனூர் சுரா ஆகியோர் பேசினர். நிகழ்வுகளை அறிவியல் இயக்க முன்னாள் வட்டாரத் தலைவர் பா.ரமேஷ் குமார் ஒருங்கிணைத்தார்.