பாபநாசம் அருகே கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் ஆலயம் ஆடி திருவிழா பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் வீதியுலா வந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆகஸ்ட் - 13
பாபநாசம் கஞ்சிமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ மகா காளியம்மன் ஆலயத்தின் ஆடி மாத பால்குடம், காவடி எடுக்கும் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கஞ்சிமேடு செல்வமகா காளியம்மன் திருவிழா கடந்த வியாழக்கிழமை அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மேலவீதி குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள, தாளத்துடன் வாண வேடிக்கையுடன் சக்திகரகம், செடில் காவடி, பால்குடம் ஆகியவற்றை பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் விஷேச பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் காவடி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கஞ்சிமேடு கிராமவாசிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.