ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி! அறிவிப்பு
புதுக்கோட்டை .ஆகஸ்ட் 16
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் திரு கு.தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு..
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் தனது எழுச்சி உரையில் தனது ஆட்சியின் அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு 16 லட்சம் அரசு ஊழியர் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி உள்ளார்.
கொரோனா காலங்களில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும் கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11% சதவீதம் வழங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 14%சதவீதமாக உயர்த்தி வழங்கியவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் .
அது மட்டும் இல்லாமல் அரசு ஊழியர் ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி மூன்று லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆட்சியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் மீது அரசு ஊழியர் ஆசிரியர் மீது போடப்பட்டிருந்த அனைத்து பழிவாங்கல் நடவடிக்கையும் ரத்து செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.
கடந்த காலத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்திய போது போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் தலைவர்களை குறைந்தபட்சம் அழைத்து கூட பேச மனமில்லாத இருண்ட ஆட்சி நடைபெற்ற போது திமுக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் .என்று வாக்குறுதி அளித்த பின் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைத்தார்கள்.
மேலும் ஆசிரியர் அரசு ஊழியர்களை பெரிதும் மதிக்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கடந்த 1ம்தேதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பேரமைப்பான ஜாக்டோ ஜியோவின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி தலைமை செயலகத்தில் அவர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக கேட்டறிந்தார். மேலும் அவற்றை உற்று நோக்கி அவற்றில் உள்ள நியாய தன்மையை உணர்ந்து உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்கள்.
மாண்புமிகு தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னதை செய்வோம்! செய்வதை சொல்வோம்! என்ற கோட்பாட்டில் விளங்கும் "சொல்லின் செல்வர்" தற்போது அவர் கூறியது போல் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் ஒன்றிய அரசுக்கு இணையான மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும்,ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
இது 16 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியத் தார்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மேலும் விரைவில் நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் எங்களுக்கு வழங்குவார் என்ற பெரும் நம்பிக்கை இந்த அறிவிப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விரைவில் நடைபெற உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பேரமைப்பான ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் இன்னும் சில கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றுவார். என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இந்த அறிவிப்பு மூலம் மேலும் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.