தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இறகு பந்து போட்டி..23 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்பு..
பாபநாசம், ஆக. 29-
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதி கோயில் தனியார் உள் விளையாட்டு அரங்கில், பாபநாசம் குறுவட்ட பள்ளி மாணவர்களுக்கான இறகு பந்து போட்டி நடைபெற்றது. போட்டிகளை வழுத்தூர் சவுக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியின் செயலாளர் ஹாஜாமைதீன், நிர்வாக குழு உறுப்பினர் பசீர்அகமது, தலைமை ஆசிரியர் அப்துல் மஜீத் ஆகியோர் துவக்கி வைத்தனர். அய்யம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திக், பள்ளி உடற்கல்வி இயக்குனர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழுத்தூர் சவுக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார். இந்த போட்டிகளில் பாபநாசம் குறுவட்ட அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் என, 23 பள்ளிகள் கலந்து கொண்டன. ஆறு பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அய்யம்பேட்டை அஞ்சுமன் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளி முதல் இடத்தையும், 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வழுத்தூர் சவுக்கத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.