கந்தர்வகோட்டை ஒன்றிய கல்லாக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.
புதுக்கோட்டை ஜூலை - 19
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களின் தலைமையில், வழிகாட்டுதலின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே. மணிவண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படியும்,மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா மற்றும் வட்டார கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆகியோர் ஆலோசனை படியும் இல்லம் தேடி கல்வி மையம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கந்தரவக்கோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக மேற்பார்வையாளர் சுரேஷ்குமார், கந்தர்வகோட்டை ஒன்றிய இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் இ.தங்கராசு,அ.ரகமதுல்லா கலந்து கொண்டு மாணவர்களுக்கு தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதன் நோக்கங்கள் குறித்து பேசியதாவது.
ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய பகுதி மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950ல் இந்திய குடியரசு நாடானது அதை அடுத்து 1956 இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் தமிழ் பேசும் மக்கள் இருந்த பகுதி மெட்ராஸ் மாநிலமாக தொடர்ந்தது. இது தமிழ் மொழி மீதும், தமிழ் பேசும் மக்கள் மீதும் பற்று கொண்ட நல்ல உள்ளங்களை கொண்டவர்களின் நெஞ்சை வாட்டியது. அப்போது இருந்து பெயர் மாற்றம் குரல் எழுந்தது.
கண்டன் சங்கரலிங்கனார் 1895 - 13 அக்டோபர் 1956) என்பவர் விடுதலைப் போராட்ட வீரரும், மதராசு மாநிலம் (மெட்ராஸ் ஸ்டேட்) என்று அழைக்கப்பட்ட பகுதிக்கு ”தமிழ்நாடு” என்று பெயர் வைக்கச் சொல்லி உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட ஒரு போராளியும் ஆவார். 76 நாட்கள் தனது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டி தனது வீட்டின் முன், உண்ணாவிரதமிருந்து உயிர் விட்டவர். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு ஊரைச் சேர்ந்தவர்.
சங்கரலிங்கனாரின் ‘தமிழ்நாடு’ பெயர் சூட்டுவது குறித்த கோரிக்கைக்கு அவருடைய மறைவுக்குப் பிறகு அழுத்தம் கொடுக்கப்பட்டு பல இயக்கங்கள் அந்தக் கோரிக்கைகளை முன்வைத்தன.
தமிழகத்தின் முதலமைச்சராக அறிஞர் அண்ணா பதவி ஏற்ற போது சட்டமன்றத்தில் 1967 ஜூலை 18 அன்று மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என பெயர் சூட்டிய மசோதா நிறைவேற்றப்பட்டது.
இது நிறைவேற்றப்பட்டால் அது தமிழின் வெற்றி, தமிழரின் வெற்றி, தமிழ்நாட்டின் வெற்றி என அப்போது சொல்லி முதல்வர் அண்ணா கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஏக மனதாக அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் ஆதரவு கொடுத்தனர்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக இப்போதைய அவைத்தலைவர் சீதா ஆதித்தனார் அறிவித்தவுடன் முதல்வர் அண்ணா தமிழ்நாடு தமிழ்நாடு என மூன்று முறை அறிவிக்க அதற்கு அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என்று சொல்லி உள்ளனர் பிறகு 1969 ஜனவரி 14 தமிழ்நாடு என்ற பெயர் முறைப்படி மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளை தான் நாம் தமிழ்நாடு நாள் என கொண்டாடி மகிழ்கிறோம்.
என்று பேசினார்கள்.
இந்நிகழ்வில் தன்னார்வலர்கள் சர்மிளா,பொம்மி,சசிகலா, பூமாதேவி,தங்கம், பவித்ரா, சிவரஞ்சனி,விமலா ரேவதி, கலைச்செல்வி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.