தென்காசி மாவட்டம் சுரண்டை கிராமத்திற்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர பொதுமக்கள் வேண்டுகோள்
தென்காசி ஜூலை-12
சுரண்டை தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஒரு ஊர். சுரண்டையில் இருந்து தென்காசி செல்ல சாம்பவர்வடகரை மார்க்கமாக ஒரு வழியும் பாவூர்சத்திரம் மார்க்கமாக ஒரு வழியும் உள்ளது. இவ்விரு வழிகளுமே கிராமங்கள் நிறைந்த ஊர்கள் நிறைய உள்ளது. இக்கிராமங்களில் இருந்து தொழில், வேலை, கல்வி, விவசாய உற்பத்திப் பொருட்களை சுரண்டை அல்லது தென்காசிக்கு கொண்டு செல்ல என்று தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இவ்விரு வழித்தடங்களிலும் பயணிக்க வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு போதுமான பேருந்து வசதிகள் கிடையாது. ஒவ்வொரு முறையும் மாணவர்களும், மக்களும் மணிக்கணக்காக காத்திருந்த பிறகே பேருந்துகள் கிடைக்கின்றது. பீக் அவர் என்று சொல்லப்படும் காலை, மாலை வேளைகளில் கூட இரண்டு, மூன்று மணி நேரத்திற்கு ஒரு வண்டியே உள்ளது. இதனால் பொதுமக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு காலை மாலை வேளைகளிலாவது இரு மார்க்கங்களிலும் குறைந்தது மணிக்கொரு வண்டியை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.