கடையம் யூனியன் அலுவலக சுற்றுச்சுவரில் போஸ்டர்கள்: நாசக்காடாக மாறும் சாலைகள்
தென்காசி ஜுலை15
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக சுற்றுச்சுவரில் போஸ்டர்கள் ஒட்டப் படுவதால் சாலை முழுவதும் குப்பைக் காடாக மாறி வருகிறது. இதுகுறித்து கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் எழுத்துப்பூர்வமாக யூனியன் ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் யூனியன் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த அவலநிலை தொடர்ந்து வருகிறது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த யூனியன் அலுவலக சுற்றுச்சுவரில் புதிய போஸ்டர்கள் ஓட்டுவதற்காக கிழித்து எறியப்படும் பழைய போஸ்டர்கள் காற்றில் பறந்து சாலைகளை குப்பையாக்குவதுடன் இருசக்கர வாகன ஓட்டிகளின் முகத்தில் பறந்து விபத்துக்களுக்கு காரணமாகிறது. தாங்கள் வேலை பார்க்கும் அலுவலக சுற்றுச்சுவரைக்கூட சுத்தமாக வைத்துக் கொள்ள முடியாத யூனியன் அதிகாரிகள் ஊரை சுத்தமாக வைத்துக் கொள்ள பஞ்சாயத்துகளுக்கு பயிற்சி அளிப்பதும், அறிவுரை வழங்கி வருவதும் வேடிக்கையாக பார்க்கப்படுகிறது.