தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் நடுத்திட்டில் சிக்கித் தவித்த 40 ஆடுகள் நான்கு நாட்களுக்குப் பிறகு வருவாய்த்துறை முயற்சியால் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
தஞ்சாவூர் ஜூலை 24
மேட்டூரில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் உபரி நீர் அனைத்தும் கொள்ளிட ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதனால் கடந்த 18ஆம் தேதி கொள்ளிட ஆற்றில் ஒரு லட்சம் கன அடிவரை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அரசு அறிவித்திருந்தும் திருவைகாவூர் பகுதியை சேர்ந்த கிராமத்தினர் சிலர் கொள்ளிடம் ஆற்றின் நடுதிட்டில் ஆடு ,மாடு மேய்க்க சென்றனர். அப்பொழுது திடீரென தண்ணீர் அதிகளவில் பெருக்கெடுத்ததால் கரைக்கு வரமுடியாமல் ஆடுகளுடன் சிலர் தவித்தனர்.தகவல் அறிந்த வருவாய்துறையினர் தண்ணீரில் சிக்கித் தவித்த ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் திருவைகாவூர் ராஜேந்திரன்(55), ரவிச்சந்திரன் (55) ,ஆகியோரை விசைப்படகுகள் மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும் புதுக்கண்டி படுகை பகுதியில் கொள்ளிட ஆற்றில் சிக்கித் தவித்த சேட்டு அவரது மகன் அருண் மற்றும் அதே ஊரை சேர்ந்த முருகன் ஆகியோரையும் விசைப்படகு மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர். மேலும் ராஜேந்திரன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய இருவரும் மேத்த ஆடுகள் கொள்ளிட ஆற்றின் நடுத்திட்டில் மாட்டிக் கொண்டன. தொடர்ந்து நான்கு நாட்கள் கொள்ளிடற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் ஆடுகளை மீட்க முடியாமலும் ஆடுகள் இருக்கின்றனவா? அல்லது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதா என தெரியாமல் தீயணைப்பு படையினர், வருவாய்த்துறையினர் திணறினர். இந்த நிலையில் ஆற்றில் தண்ணீரின் அளவு சற்று குறைந்ததால் கும்பகோணம் ஆர்டிஓ லதா உத்தரவின் பேரில் பாபநாசம் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு படையினர் விசைப்படகுகள் மூலம் கொள்ளிட ஆற்றில் திருவைகாவூர் முட்டுவாஞ்சேரி பகுதியில் உள்ள நடுத்திட்டில் சென்று பார்த்தனர். அங்கு கடந்த நான்கு நாட்களாக நடுத்திட்டிலேயே சிக்கித் தவித்த சுமார் 40 ஆடுகளை விசைப்படகுகள் மூலம் மீட்டு திருவைகாவூர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர்.பின்னர் மீட்கப்பட்ட ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலம் முதல்உதவி சிகிச்சைக்கு பின் உரியவர்களிடம் ஆடுகள் ஒப்படைக்கப்பட்டன. கொள்ளிடம் ஆற்றில் நான்கு நாட்களாக தவித்த ஆடுகளை மீட்கும் தொடர்முயற்சியில் ஈடுபட்ட பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வருவாய் ஆய்வாளர் சுகுணா, கிராம நிர்வாக அலுவலர் சதீஷ், ஒன்றிய கவுன்சிலர் விஜயன் , திருவைகாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பவுனம்மாள் பொன்னுசாமி, மற்றும் காவல்துறையினர், வருவாய்த்துறையினர், தீயணைப்பு படையினரை கிராமமக்கள் பெரிதும் பாராட்டினர்.
தஞ்சையில் இருந்து
செய்தியாளர்
எஸ்.மனோகரன்