வரலாற்றில் இன்று தேசிய மருத்துவர் தினம்
ஜூலை, 1
தனிமனிதருக்கும், சமூகத்துக்கும் மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம். (National Doctors Day).
மருத்துவர் தினம் என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. பல நாடுகளில் அரசு விடுமுறை தினமாகவும் உள்ளது. பெரும்பாலும், மருத்துவம் சார்ந்த நிறுவனங்களே இந்த நாளைக் கொண்டாடி வருகிறது.
இந்தியாவில் பிரபல மருத்துவரும் மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வராக இருந்த பிதான் சந்திர ராய் (B.C.Roy) அவர்களின் பிறந்த நாளான ஜூலை முதல் தேதி மருத்துவர் தினமாக்கச் சிறப்பிக்கப்படுகிறது.
1991 முதல் இந்தியாவில் மருத்துவர் தினம் கடை பிடிக்கப்படுகிறது. மருத்துவர். பி.சி.ராய் அவர்கள் மேற்கு வங்காள மாநிலத்தில், 1882– ஜூலை முதல் நாள் பிறந்தார்.
1948 ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டில் தமது இறப்பு வரை 14 ஆண்டுகள் முதலமைச்சராகத் தொடர்ந்து பதவியிலிருந்தார். இவர் சிறந்த மருத்துவராகவும், இந்திய விடுதலை இயக்கத்தில் போராளியாகவும் புகழ் பெற்று விளங்கினர்.
மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்குத் தளம் அமைத்த பி.சி.ராய் முதன்மை நகரங்களாக விளங்கும் துர்க்காப்பூர், கல்யாணி மற்றும் கொல்கத்தாவின் புறநகர் பகுதியான பிதான் நகர் போன்ற ஊர்கள் உருவாகக் காரணமாக இருந்தார்.
கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்த பி.சி.ராய் ஒரே நேரத்தில் மருந்தியல் மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான எஃப்.ஆர்.சி.எஸ் என இரு பட்ட படிப்புகளையும் இரண்டாண்டுகள் மூன்று மாதங்களிலேயே படித்து முடித்தது சாதனை படைத்தார்.
பிறந்த நாளன்றே (1882–ஜூலை,1) மறைந்த (1962- ஜூலை,1) பெருமைக்குரியவர் திரு. பி.சி.ராய். இந்தியாவில் சிறப்பான முறையில் மருத்துவ சேவையாற்றும் மருத்துவர்களுக்கு இவரது பெயரிலேயே "பி. சி. ராய் விருது" வழங்கப்படுகிறது.
பி.சி.ராயின் நினைவாக 1976 ஆம் ஆண்டில் "பி.சி.ராய் விருது" இந்திய மருத்துவ கழகத்தால் நிறுவப்பட்டது. மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருது ஒவ்வொரு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது: