அரையபுரம் வீரமஹா சக்தி பத்ரகாளியம்மன் ஆலய சித்திரை திருவிழா
பாபநாசம் மே.18
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் அரையபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வீர மஹா சக்தி பத்திரகாளியம்மன் ஆலயத்தின் 11 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. அரையபுரம் வீரமஹா சக்தி பத்ரகாளியம்மன் சித்திரை திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சி கோவில் நிர்வாகி கோமதிஅம்மாள் முன்னிலையில் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 108 சிவாலயம் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மேள, தாளத்துடன் வாண வேடிக்கையுடன் சக்தி கரகம், காவடி, பால்குடம் ஆகியவற்றை பக்தர்கள் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். மதியம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் கஞ்சி வார்த்தலும் அதனை தொடர்ந்து மாலை அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு விஷேச பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி, மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.