உண்மையில் அட்சய திரிதியை அன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டுமா...
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம். ஆனால், இறை அடியார்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஆதியில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அற்புதமான வேத வாக்கியங்கள், பழமொழிகள் எல்லாம் தற்காலத்தில் அனர்த்தம் ஆகி விட்டதற்கு அட்சய திரிதியையும் ஒன்று. சற்றே யோசித்துப் பாருங்கள். அட்சய திரிதியை என்றால் என்ன?
இன்றைய உலகில் நமக்கு வேண்டிய எல்லா விளக்கங்களும் புராணங்களிலும் இதிகாலங்களிலும் உள்ளன. எனவேதான் அனைவரும் தினசரியே மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.
சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
உலகிவ் நல்ல காரியங்கள் பெருக வேண்டும், மக்கள் சமுதாயத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை பெருக வேண்டும். பாரெங்கும் அமைதி பெருக வேண்டும், அன்பு பெருக வேண்டும், மற்றவர் நலனுக்காகத் தங்களைத் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணம் பெருக வேண்டும். தன்னலம் பாராது மகான்களும், ஆன்மீக வழிகாட்டிகளும் நிறைவேற்றும் அன்னதானத்தில்தான் இவை எல்லாம் பெருகும். அதை விடுத்து, தங்கம் வாங்க வேண்டும், வைரமும் மாணிக்கமும் பெருக வேண்டும் என்ற எண்ணம் பெருகினால் சமுதாயத்தில் அமைதி நிலைக்குமா, இன்பம் கனியுமா?
திதி நம் மூதாதையர்களுடன் தொடர்பு கொண்டது. அதனால்தான் இறந்தவர்களின் திதியை நாம் கொண்டாடுகிறோம். நாம் இன்று பெற்றிருக்கும் வீடு, வாகனம், பதவி, அந்தஸ்து, நற்பெயர் போன்ற எல்லாவற்றிற்கும் நம் மூதாதையர்களின் ஆசியே காரணம். எனவே, அட்சய சக்திகள் பெருகும் திரிதியை அன்று அன்னதானம் செய்வதால் நம் மூதாதையர்கள் மகிழ்ந்து அருளாசியைப் பொழிவார்கள். மூதாதையர்களின் அருளாசி பெருகும் நாளே அட்சய திரிதியை ஆகும் என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.
மனிதர்களைப் போல தெய்வங்களும் அவதாரங்களும் மதி மயங்கி தவறுகள் இழைப்பது கிடையாது. அவ்வாறு அவர்கள் தவறுகள் செய்வது போல் தோன்றுவதே நம்மைத் திருத்தி கரையேற்றுவதற்காகத்தான். அட்சய திருதியையின் மகத்துவத்தை பாமர மக்களும் அறிவதற்காகவே சிவபெருமான், அன்னபூரணி, பிரம்மா என்ற தெய்வ மூர்த்திகளே திருவிளையாடல்களைப் புரிந்து, நம்முடைய குற்றங்களைக் களைந்து நம்மை நாமே திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அட்சய திருதியை என்னும் புனித நாளில் அளிக்கின்றார்கள் என்பதே உண்மை. மிகவும் அரிதான இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு சற்குரு காட்டும்வழியில் அன்னதானம், ஆடை தானம், மாங்கல்ய தானம் போன்ற தான தர்மங்களை நிறைவேற்றுதலே அட்சய திரிதியை நாளைக் கொண்டாடும் முறையாகும்.
அதனால், அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கக் கூடாது என்று பொருளல்ல. உங்கள் நோக்கமே இங்கு முக்கியம். தானத்திற்காக, ஏழைகளின் திருமணத்திற்காக நீங்கள் தங்கம் வாங்குவதாக இருந்தால் அட்சய திரிதியை மிகவும் சிறந்த நாளே. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அன்று நீங்கள் வாங்கும் தங்கத்தில் அட்சய சக்திகள் பெருகி சமுதாயத்திற்கே அமைதியை அள்ளி வழங்கும்.
அட்சய திரிதியை என்பது அன்பையும், அமைதியையும் அள்ளித் தரும் நாள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டால் மற்ற விஷயங்கள் உங்களுக்குச் சொல்லாமலே புரிய வரும். தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை, அன்னபூரணி தேவி கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம், அம்பாள் சிறப்புப் பெற்ற தலங்களான சமயபுரம், வெக்காளியம்மன் கோயில், மாகாணி அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற திருத்தலங்களில் அட்சய திரிதியை அன்று அன்னதானம் இயற்றுவது மிகவும் சிறப்புடையது. ஒரு யுகத்தில் மக்களை வறுமைப் பிணியிலிருந்து காக்க வயல்வெளிகளில் நெல்லுக்குப் பதிலாக சோறாகவே அம்பாள் விளைவித்துக் கருணை புரிந்த தலமே திருசோற்றுத்துறை சிவத் தலமாகும்.