ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். இது இல்லம் தேடிக் கல்வித்திட்டம்
புதுக்கோட்டை ஏப்ரல் - 21
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்களின் ஆலோசனையின்படியும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர். சாமி. சத்தியமூர்த்தி அவர்களின் வழிகாட்டலின்படியும், கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் ஆடல் பாடல் விழாக்கள் கொண்டாட்டம் என சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கந்தர்வகோட்டை ஒன்றியம், விராலிப்பட்டி குடியிருப்பில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்களை மாவட்ட மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் பார்வையிட்டு கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை உற்று நோக்கினர்.
தன்னார்வலர்கள் சுவேதிரா, கரிஷ்மா, ரம்யா, மஹாலக்ஷ்மி, ராஜலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு ஆடல், பாடல், புதிர், விளையாட்டுகள், எளிய கணித செயல்பாடுகள், ஆங்கில வாசிப்பு பயிற்சி, யோகா போன்றவற்றை உற்சாகத்தோடு கற்பித்து வருகின்றனர். அவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முத்துக்குமார் மற்றும் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் இ.தங்கராசு மற்றும் அ.ரகமத்துல்லா ஆகியோர் பாராட்டியதுடன் தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழுவுடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சியில் பங்கு கொள்ளவும், மாணவர்களின் கல்வி நலனை இன்னும் மேம்படுத்த உதவிடவும் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.
இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்கள் மாலை நேரத்திலும் கற்று வருவது பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.