நகை கொள்ளையில் கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது.
நகை கொள்ளையில் கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் கைது.
3 கிலோ தங்கம் மீட்பு.
சேரன்மாதேவி:
நெல்லை அருகே நகை கொள்ளை வழக்கில் கல்லூரி மாணவர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ தங்கம் மீட்கப்பட்டது.
4½ கிலோ நகை கொள்ளை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் புதுமனை தெருவைச் சேர்ந்தவர் மைதீன் பிச்சை (வயது 60). இவர் வீரவநல்லூர் பஜாரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 11-ந் தேதி இரவில் கடையில் இருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவர் வரும்போது, ஒரு பையில் 4½ கிலோ தங்க நகைகளை கொண்டு வந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், மைதீன் பிச்சையை வழிமறித்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு, நகை உள்ள பையை கொள்ளை அடித்துச் சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர்.
தீவிர விசாரணை
இந்த தனிப்படையினர் கடந்த 2 நாட்களாக நகைக்கடை பகுதி வழியாக அடிக்கடி வந்து சென்ற நபர்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும், அந்த பகுதியில் பதிவான செல்போன் அழைப்புகளை ெகாண்டும் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஒரு குறிப்பிட்ட செல்போன் எண் மட்டும் கடந்த 2 நாட்களாக அதிக அளவில் பஜார் பகுதியில் இருந்து பேசப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த எண்ணை வைத்து போலீசார் தேடியபோது, அதே ஊரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருடையது என்பது தெரியவந்தது.
அவருடன் மேலும் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதையடுத்து கல்லூரி மாணவர் உள்பட 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. அவர்களையும் தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இவர்கள் 5 பேரும் தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பரபரப்பு தகவல் வெளியானது.
5 பேர் கைது
இந்த நிலையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேற்று வீரவநல்லூர் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
வீரவநல்லூரில் 4½ கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் மேற்பார்வையில், சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு குற்றவாளிகளை பிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக மன்னார்கோவிலை சேர்ந்த மருதுபாண்டி (20), காக்கநல்லூரை சேர்ந்த அய்யப்பன் (24), 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர், 2 இளம்சிறார்கள் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
3 கிலோ மீட்பு
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கொள்ளை அடித்த நகைகளை டிரம்ஸ் அடிக்கும் கொட்டில் மறைத்து ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் பதுக்கி வைத்து இருந்ததாக தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று சுமார் 3 கிலோ 100 கிராம் தங்க நகைகளை மீட்டு உள்ளனர். மீதம் உள்ள நகைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளை கும்பலிடம் இருந்து ஒரு அரிவாளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த சில நாட்களிலேயே கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படையினரை பாராட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.